Friday, November 27, 2009

பயனுள்ள மைக்ரோவேவ் டிப்ஸ்
  • இரண்டு பெரிய எலுமிச்சம் பழம் அளவு புளியை, ¼ கப் சுடுநீரில் பத்து நிமிடங்கள் ஊறவைத்து மிக்ஸியில் அரைக்கவும். புளியை வடிகட்டியில் வடிகட்டி, அதை மைக்ரோ- ஹையில் மூடாமல் 7 அல்லது 9 நிமிடங்கள் வைக்கவும்.  ஒருமுறை கலந்து விடவும். புளி பேஸ்ட் ரெடி. நீண்டநாட்களுக்கு ப்ரிஜ்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.
  •  ப்ரிஜ்ஜில் இருக்கும் இறுகிப்போன வெண்ணெய்யை வெளியே எடுத்தால் அது எப்பொழுது அறையின் வெப்ப நிலைக்கு வருவது? அதை எப்பொழுது காய்ச்சுவது? வெண்ணெய்யை ஓவனில் டீப்ராஸ்டு மோடில் 20 செகண்டுகள் வையுங்கள். வெண்ணெய் மெத்தென்று இருக்கும்.
  • பூண்டையும், சின்ன வெங்காயத்தையும் ஒரு தட்டு அல்லது பேப்பரில் பரத்தி மைக்ரோ- ஹையில் 20- 30 செகண்டுகள் வைத்தால், அவற்றின் முதுகுத் தோலை ஈசியாய் உரித்து விட முடியும்.
  • ப்ரிஜ்ஜில் வைத்த எலுமிச்சம் பழத்தைப் பிழிய, மைக்ரோ- ஹையில் 30 செகண்டுகள் வைத்து எடுத்தால் பிழி பிழி”  என்று பிழியலாம்.  நிறைய சாறு வழியும்.
  • தண்ணீரில் தக்காளியைப் போட்டு மூடி, மைக்ரோ- ஹையில் 3 நிமிடங்கள் வைத்து எடுங்களேன். தக்காளியின் அரக்குப் பாவாடையை அழகாக அவிழ்த்து விடலாம்!

Thursday, November 26, 2009

சைனீஷ் நூடுல்ஸ்கடைகளில் கிடைக்கும் மசாலா சேர்ந்த நூடுல்ஸ்களில் வரும் மசாலாப் பொடிகளில் அஜினோ மோட்டோ கலக்கப்பட்டுள்ளது. அது உடலுக்கு நல்லதல்ல.  
மசாலா சேர்க்காத நூடுல்ஸை சுவையாகச் வீட்டிலேயே செய்வது எப்படியென்று பார்போம்.


தேவையானவை:
நூடுல்ஸ் – 1 பாக்கெட் 
சோயா சாஸ் – 2 டீஸ்பூன் 
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன் 
வினிகர் - ½ டீஸ்பூன் 
தக்காளி சாஸ் – 1 டீஸ்பூன் 
குடை மிளகாய் – 1 
கேரட் - 1 
முட்டைக்கோஸ் – ¼ 
பச்சை பட்டாணி – 50 கிராம் 
வெண்ணெய் - 2 டீஸ்பூன் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்


செய்முறை:
தளதளவென கொதிக்கும் நீரில் நூடுல்ஸை போட்டு எடுத்து, குளிர்ந்த நீரில் அலசி ,ஒரு ஸ்பூன் வெண்ணெய் கலந்து தனியாக எடுத்து வையுங்கள். 


பொடியாக நறுக்கிய பச்சை மிள்காய், பொடியாக சீவப்பட்ட முட்டைக்கோஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி அகியவற்றை சேர்த்து வதக்கவும். இதனுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், சில்லி சாஸ், தக்காளி சாஸ் மற்றும் வினிகர் சேர்த்து கிளறவும். பிறகு தனியாக எடுத்து வைத்த நூடுல்ஸையும் போட்டு கிளறினால் சைனீஷ் நூடுல்ஸ் ரெடி.

குறிப்பு: முட்டை, காய்கள், பனீர், காளான் என இனைப்புகளை மற்றும் மாற்றி விதவிதமாக செய்யலாம்.

Tuesday, November 24, 2009

சத்தான ஸ்டஃப்டு புரோட்டா


புரோட்டா என்றாலே மைதாவில் செய்த உணவு உடலுக்கு ஆரோக்கியம் இல்லாதது என்று பலர் கருதுவதுண்டு. அனால் அதே புரோட்டவை காய்கறிகள் ஸ்டஃப் செய்து ஆரோக்கியமானதாக மாற்றி விடலாம். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரெசிபி இது.


செய்முறை 


தேவையானவை:


மைதா மாவு  -  2 கப், 
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவைகேற்ப


உள்ளே ஸ்டஃப் செய்யும் பூரணத்துக்கு: 


மெல்லிதாக நீளவாக்கில் நறுக்கிய முட்டைகோஸ் - ஒரு கப்,
நீளவாக்கில் நறுக்கிய கேரட் - அரை கப்,
நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம் - கால் கப்,
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4,
பூண்டு (விருப்பப்பட்டால்) - 4 பல்,
சோயா சாஸ் - 2 டீஸ்பூன், 
வெங்காயத்தாள் - ஒரு கைப்பிடி,
உப்பு - சுவைக்கேற்ப,
எண்ணெய் - 2 அல்லது   3 டேபிள்ஸ்பூன்,
முளைப்பயறு - ஒரு கைப்பிடி.


செய்முறை: எண்ணெய் காயவைத்து, பூரணத்துக்கு கொடுத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் ஒன்றாக சேருங்கள். 3 நிமிடம் வதக்கி இறக்குங்கள். இது தான் புரோட்டாவுக்குள் ஸ்டஃப் செய்யும் பூரணம்.


இனி மைதாவை உப்பு, சிறிது எண்ணேய் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளுங்கள்.  பிசைந்த மாவிலிருந்து சிறிதளவு எடுத்து, மெல்லிய சப்பாத்திகளாக திரட்டி, அதன் நடுவில் பூரணக் கலவையை நிரப்புங்கள்.  பக்கவாட்டில் மடித்து, சதுர வடிவமாக்கி கொள்ளுங்கள். தோசைகல்லில் போட்டு, எண்ணேய் ஊற்றி சுட்டெடுங்கள்.  


முயற்சி செய்து பாருங்கள்.


டிப்ஸ்: ஸ்டஃப்டு புரோட்டா நடுவில் கனமாகவும், ஓரத்தில் மெல்லிதாகவும் இட்டு நடுவில் ஃபில்லிங்கை வைத்து தேய்த்தால் ஃபில்லிங் நன்கு பரவி இருக்கும். 


Monday, November 23, 2009

தாலாட்டு பாட்டு
இந்த காலத்து இளம் தாய்மார்கள் அழும் குழந்தையை தேற்றுவதற்கோ அல்லது குழந்தையை தூங்க வைப்பதற்கோ தாலாட்டு பாடத் தெரியாமல் கஷ்டப்படுவதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். அவர்களுக்காகவே நான் என் குழந்தைக்குப் பாடிய தாலாட்டுப் பாடல் இதோ.

"ஆராரோ ஆரிராரோ கண்ணே
என் கண்ணே நீ கண்ணுறங்கு
என் பொன்னே நீ கண்ணுறங்கு
யாரஅடிச்சா நீ அழுற [ஆராரோ ஆரிரரோ ......]

மாமி அடிச்சாளோ மல்லிகைப்பூ செண்டாலே
மாமன் அடிச்சாரோ மரிக்கொழுந்து செண்டாலே
பாட்டி அடிச்சாரோ பஞ்சுடைக்கும் கோலாலே
பாட்டன் அடிச்சாரோ பசுவேட்டும் கோலாலே
அண்ணன் அடிச்சாரோ அத்திப்பூ கையாலே

அக்கா அடிச்சாரோ ஆவாரம்பூ கையாலே
அடிச்சார சொல்லியழு அக்கினைகள் பண்ணுகிறேன்
அடிக்கு அடியே வாங்கிடுவேன்
அத்தனையும் தாங்கிடுவேன் [ஆராரோ ஆரிரரோ ......] "

Related Posts with Thumbnails